Welcome to Arulmigu Munkudumeeswarar Temple - Ponvilintha Kalathur

அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயில் - பொன்விளைந்த களத்தூர்

மூலவர் : முன்குடுமீஸ்வரர்

உற்சவர் : சந்திரசேகரர்

அம்மன் : மீனாட்சி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம்: வில்வ தீர்த்தம்

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயில்

இறைவனின் லிங்க பாணத்தின் மீது வழுவழுப்பான மேல் பகுதியில், குடுமி ஒன்று முன்புறம் விழுந்தவாறு காட்சி தருகின்றது. இதனாலேயே இறைவன் முன்குடுமீஸ்வரர் என அழைக்கப்படுகின்றார்.முன் குடுமியுடன் அருளும் ஈஸ்வரன்!சிவலிங்கத் திருமேனியில் முன்குடுமி வைத்துள்ள சிவன், பல்லவன் மண் தளியாக எழுப்பிய கோவில், சோழன் கற்றளியாக்கிய ஆலயம், நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் வணங்கிய இறைவன், நளவெண்பா புலவர் புகழேந்தி, அந்தகக் கவி வீரராகவ முதலியார், படிக்காசுப் புலவர் ஆகியோர் தோன்றிய தலம் என பல்வேறு பெருமைகளை கொண்டது முன்குடுமீஸ்வரர் ஆலயம்.

தல வரலாறு:

இந்தக் கோயில் இறைவன் மீது மாறாத பக்தி.தினமும் காலையும் மாலையும் இறைவனுக்குச் சாற்றிய மலர் மாலை அரசனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.பல்லாண்டுகளாய் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வந்தார் ஆலய அர்ச்சகர்.அன்றைய தினம் விதி வேறுவிதமாய் வேலை செய்தது.அர்ச்சகரின் மனைவிக்கு அந்த விபரீத ஆசை எழுந்தது. `தினம், தினம் என் கணவர் பூஜிக்கும் இறைவனின் மாலை அரசனுக்குத்தானே செல்கிறது! அதனை இன்று மட்டும் நான் சூடிக்கொண்டால் என்ன?' என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்போல் அந்த மாலையை எடுத்து தான் அணிந்துகொண்டாள். அழகு பார்த்தாள்.

அதற்குள் அரசவைப் பணியாளர் வந்துவிடவே அவசர அவசரமாய் மாலையை எடுத்து ஒன்றும் தெரியாததுபோல் கொடுத்து அனுப்பினாள். அவளுடைய நீண்ட தலைமுடி ஒன்று அந்த மாலையில் சிக்கிக் கொண்டது அவளுக்குத் தெரியாது.
மன்னன் கைக்கு மாலை போயிற்று. முதலில் அவன் கண்களில் பட்டது அந்த நீள தலைமுடிதான். அர்ச்சகரை அழைத்தான். காரணம் கேட்டான்.பயந்து நடுங்கிய அவர் அந்தப் பொய்யை வேறு வழியின்றி சொன்னார் ``மன்னா, நம் கோயில் சிவலிங்கத்தின் தலையில் சிகை இருக்கிறதே. அதில்தான், ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளது'' என்றார்.அரசன் மேலும் எகிறினான். ``நாளைக் காலை ஆலயம் வருவேன். இறைவனாரின் கேசத்தைக் காட்டாவிட்டால், உன் சிரம் அறுக்கப்படும்'' என்று கர்ஜித்தான்.

அர்ச்சகரின் மனைவிக்குத் தான் செய்த பிழையால் பயம் ஏற்பட்டது. இருவரும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு தங்கள் பிழை பொறுத்து, காக்குமாறு கதறினார்கள்.``அஞ்சவேண்டாம். நான் உங்களை மன்னித்தேன். நாளை வாருங்கள்'' என்று அசரீரி எழுந்தது.சொன்னபடி மறுநாள் காலை, அரசன் ஆலயத்திற்கு வந்துவிட, அங்கே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.அத்தனை நாட்களும் மொழுமொழுவென்று இருந்த சிவலிங்கத்தின் தலையில் கூந்தல் பளபளக்க முன்குடுமி முளைத்திருந்தது!.அதனைக் கண்டு அரசன் பரவசமடைந்தான். ஆலய பூஜைகள் மேலும் சிறக்க ஏராளமான பொன்னும் பொருளும் அளித்தான்.இன்றைக்கும் பொன் விளைந்த களத்தூர் சென்றால் இறைவன் முன்குடுமியுடன் காட்சி தருவதை நீங்கள் காணலாம். சுந்தரேஸ்வரர் என்ற அவரது பெயரே, இப்போது முன் குடுமீஸ்வரர் என்று ஆகிவிட்டது.


திருவிழா:

பங்குனியில் பிரம்மோற்ஸவம், சித்ராபவுர்ணமி, ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி.

கல்வெட்டுகள்

இவ்வூர் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு, கி.பி. 1911–ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள 21 கல்வெட்டுகள் சான்றுகளாக அமைந்துள்ளன. அந்த கல்வெட்டுகளில் பழமை வாய்ந்தது, கி.பி. 860–ம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு ஆகும். இதில் இவ்வூர் ஏரியின் மூலம் வரும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு பெருந்திருக்கோவில் எனப்படும் முன்குடுமீஸ்வரர் ஆலயத்திற்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டல, களத்தூர் நாட்டு கங்கை கொண்ட சோழ மண்டலம் என இன்றைய பொன் விளைந்த களத்தூர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, விக்கிரம சோழதேவன் (கி.பி.1133), குலோத்துங்கச் சோழதேவன் (கி.பி.1133), (1138), இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1145), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1190), ராஜராஜதேவன் (கி.பி. 1224), மாறவர்மன் சுந்தர பாண்டியன் முதலான 19 கல்வெட்டுகளும் முன்குடுமீஸ்வரர் ஆலயம் பற்றியும், முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1116), மற்றும் 13–ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் ஊரின் மற்றொரு ஆலயமான ஆதிபுரீஸ்வரர் ஆலயம் பற்றியும் குறிப்பிடுகின்றன. விஜயகண்ட கோபாலன்(கி.பி.1265) ஆட்சியில் தன் தாயாரின் நினைவைப் போற்றும் வகையில், அருளாளப் பெருமானான ராஜராஜ விழுப்பரையன் என்பவன் அம்மன் சன்னிதியை கட்டினான் என கல்வெட்டு கூறுகிறது.

No posts.
No posts.